Tuesday, August 8, 2017

ஷேக் தாவூத்கள் பெருகட்டும்..!



தமிழகத்தின் மையப் பகுதியில் இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான திருச்சிராப்பள்ளியில் கடந்து நாற்பதாண்டுகளாய் இஸ்லாமிய இயக்கப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சமரசம் இதழின் முன்னாள் ஆசிரியரும் முன்னாள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினருமான அப்துல் ஹன்னான் சாகிப், தமிழக ஜமாஅத்தின் முன்னாள் துணைத் தலைவரும் குர்ஆன் மொழிபெயர்ப்பாளருமான மௌலவி ஏ குத்புத்தீன் அஹ்மத் பாகவி ஆகியோர்தாம் இந்த நகரத்தில் இயக்கம் வேரூன்ற களம் அமைத்துத் தந்த முன்னோடிகள். அதிலும் குறிப்பாக மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நகரத்து இளைஞர்கள் மத்தியில் பணியாற்றுவதில் தீவிர ஈடுபாடும் அக்கறையும் செலுத்தி வந்தார். இவ்வாறு மௌலானாவால் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாய் ஜொலித்தவர்கள் சகோதரர் ஷேக் தாவூத், சகோதரர் டி. ஈ. நாசர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

சகோதரர் ஷேக் தாவூத் 21 ஜூலை வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். ஷேக் தாவூத் அவர்களுக்கு இது இரண்டாவது அறுவை சிகிச்சை ஆகும். மருத்துவமனைக்குப் போவதற்கு முன்னால் ஜமாஅத் அலுவலகம் வந்து அனைவரையும் சந்தித்து, சிரித்துப் பேசி, பிரியாவிடை பெற்று வந்தார் அவர்.

அவருடைய மறைவு குறித்து இரங்கலைத் தெரிவித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி எழுதுகின்றார் : ‘அருமைச் சகோதரர் ஷேக் தாவூத் பாய் இறைவனிடம் மீண்டுவிட்டார் என்கிற செய்தி இன்று காலை இடியாய் என்னைத் தாக்கியது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். நான் இதனை இஸ்லாமிய இயக்கத்தின் மௌன உழைப்பாளிகளில் ஒருவரின் மரணமாக, அவ்வளவாகப் பேசப்படாத அப்பழுக்கில்லாத, உளத்தூய்மை நிறைந்த செயல் வீரரின் மரணமாகப் பார்க்கவில்லை. அதற்கு மாறாக இஸ்லாமிய இயக்கத்துக்காக விலைமதிப்பு மிக்க இரத்தினங்களையும் வைரங்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்த தொழிற்சாலை ஒன்று இழுத்து மூடப்பட்டதாகவே பார்க்கின்றேன்.

தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில் வாழ்ந்து வந்தவர்தாம் ஷேக் தாவூத். அவர் மெத்தப் படித்த படிப்பாளி அல்லர். அலட்டிக் கொள்ளாத, ஆரவாரம் இல்லாத இயக்க ஊழியராகத்தான் அவர் இருந்தார். எஸ்.ஐ.ஓவிலிருந்து ஒய்வு பெற்ற போது அந்ந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஜமாஅத்தும் முழுமையாக நிறுவப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் திருச்சியில் மிகவும் பின்தங்கிய வறுமையும் ஏழ்மையும் நிறைந்த பகுதியில் அவர் தம்முடைய பணியைத் தொடங்கினார். குடிசைகளில் வசித்து வந்த, கைவண்டிகளில் வணிகம் செய்து வந்த ஏழை எளிய மக்களின் பிள்ளைகளை இலக்காக்கி பாலர் சங்கத்தை உருவாக்கி பணியாற்றத் தொடங்கினார், அவர். அந்தப் பிள்ளைகளிடம் அவர் எந்த அளவுக்கு அளப்பரிய பாசத்தையும் அன்பையும் கொட்டினார் எனில் அவர்கள் அவரின் அன்புக்கு அடிமை ஆகிவிட்டார்கள். ஷேக் சாகிபும் அந்தப் பிள்ளைகளின் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். மேலும் மார்க்கக் கல்வியையும் விழிப்பு உணர்வையும்கக ஊட்டிவிட்டு அந்த இளவல்களின் இதயங்களில் இஸ்லாமிய உணர்வுகளை மீட்டெடுத்தார்.

நான் எஸ்.ஐ.ஓவின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்ற போது திருச்சிக்கு முதல் முறையாகச் சென்றேன். அந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஷேக் சாகிப் நடத்தி வந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டேன். ஏட்டறிவோ, பட்டறிவோ இல்லாத ஏழை பெற்றோரின் பிள்ளைகள் - அவருடைய சீடர்கள் - அப்போது முதுகலைப் பட்டப் படிப்பும், பொறியியலும் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் திருச்சி எஸ்.ஐ.ஓவை வெற்றிச் சிகரங்களில் ஏற்றி அமர்த்தி விட்டிருந்தார்கள். அவர்கள் அப்போது அங்கு செய்து வந்த பணிகளைப் பார்த்து விட்டு தில்லி திரும்பிய நான் ரஃபீக் மன்ஜில் இதழில் ‘இந்தியத் திருநாட்டின் முன்மாதிரி கிளையாக திருச்சி கிளை’ என்கிற தலைப்பில் அனைத்தையும் விரிவாக எழுதினேன். (இதன் மொழிபெயர்ப்பு சமரசத்திலும் வெளியானது)

இன்றைய நிலைமை என்னவெனில் ஷேக் தாவூத் பாயின் அந்தத் தொழிற்சாலையிலிருந்து ஒரு டஜனுக்கும் அதிகமான பிஹெச்டி பட்டம் பெற்ற முனைவர்கள் வெளியாகிவிட்டிருக்கின்றார்கள். முதுகலைப் பட்டதாரிகள், பொறியியல் வல்லுநர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வதும் சிரமமே. இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். இவர்களில் சிலர் அமெரிக்கா, அய்ரோப்பா போன்றவற்றின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பும் படித்து முடித்திருக்கின்றார்கள். எல்லோருமே தத்தமது இடங்களில் இஸ்லாமிய இயக்கத்தின் முதன்மை இலட்சியப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியவாறு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்கள். ஒரு சாமானியராகத் தோற்றம் தருகின்ற இந்த ஒற்றை மனிதரின் தொலைநோக்கும் உயிரைக் கொடுத்துப் பணியாற்றும் வித்தையும் இன்று எத்தகைய அற்புதத்தை நிகழ்த்தி இருக்கின்றது எனில், இன்று இஸ்லாமிய இயக்க வானில் ஒளி வீசுகின்ற தாரகைகளைக் கொண்ட ஒரு நட்சத்திர மண்டலத்தையே தவழ விட்டு சாதனை படைத்திருக்கின்றார், அவர். இன்னும் எத்தனையெத்தனை ஏழை, எளிய குடும்பங்களின் சித்திரத்தை அவர் மாற்றியமைத்துவிட்டிருக்கின்றார் என்பதை எளிதாகச் சொல்லி விட முடியாது. சமூகச் சூழல்கள் எப்படி மாறுகின்றன, ஏழ்மையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மீண்டெழுந்து வளர்ச்சிப் பாதையில் குடும்பங்கள் எப்படி பயணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டுமா, திருச்சிராப்பள்ளியின் அந்தப் பின்தங்கிய முஹல்லாவுக்குச் சென்று பாருங்கள்.
எந்தவொரு மக்தபின் (பயிற்சிப் பாசறையின்) ஆசானும் உண்மையில் மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற தொழிற்சாலையாகத்தான் இருப்பார்.

இவ்வாறு மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற அழகான தொழிற்சாலையை நான் என்னுடைய வாழ்நாளில் ஷேக் பாயின் எளிமையும் இனிமையும் நிறைந்த அமர்வுகளில் கண்கூடாகப் பார்த்தேன். அவருடைய அவையும் அமர்வுகளும் எந்நேரமும் மாணவர்களாலும் இலட்சியக் கனலுடன் இயங்குகின்ற இளைஞர்களாலும்தாம் நிறைந்திருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் ஷேக் பாயின் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக! டாக்டர் அஜீஸ், டாக்டர் இப்ராஹீம் மற்றும் அவர்களைப் போன்ற பிற சகோதரர்கள் ஆற்றுகின்ற சேவைகளை ஷேக் பாயின் கணக்கில் ஸதகாயே ஜாரியாவாக - நிலையாக நன்மைகளைத் தந்துகொண்டே இருப்பவையாய் ஆக்குவானாக!’

எஸ்.ஐ.ஓவின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஜமாஅத்தின் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ். அமீனுல் ஹஸன் எழுதுகின்றார்:  ‘சகோதரர் ஷேக் தாவூத் அவர்களின் திடீர் மரணத்தால் நான் பெரிதும் மனம் உடைந்து நிற்கின்றேன். இஸ்லாமிய இயக்கத்துக்காக அவர் ஆற்றிய சேவைகளை எந்த வகையிலும் புறக்கணித்துவிட முடியாது. தாம் செய்த சேவைகளால் மன நிறைவு பெற்ற நிலையிலேயே அவருடைய ஆன்மா இந்த தற்காலிக உலகத்திலிருந்து விடை பெற்றிருக்கும். அவர் சமூகத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த குடும்பத்துப் பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொண்டார். அவர்களை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கினார். அந்த இளவல்களுக்கு எந்த அளவுக்குப் பயிற்சியையும் சிந்தனைத் தெளிவையும் உயர்ந்த இலட்சியத்தையும் ஊட்டிவிட்டார் எனில் அவர்கள் வளர்ந்து கிளை பரப்பி நிழல் தருகின்ற விருட்சங்களாய் ஓங்கி நின்றார்கள். மற்றவர்களையும் தாங்கிப் பிடிப்பவர்களாய் மலர்ந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த இளவல்கள் இஸ்லாமியத் துடிப்பும் இலட்சியக் கனலும் நிறைந்தவர்களாய் மிளிர்ந்தார்கள். இவர்கள் அனைவருமே தத்தமது குடும்பங்களில் முதல் முறையாக பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் காலடி எடுத்து வைத்த முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். என்னுடைய கணிப்பின்படி அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பதினைந்து முனைவர்களும் (பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள்), ஐம்பதுக்கும் அதிகமான முதுகலைப் பட்டதாரிகளும் இன்று மிக உயர்ந்த பதவிகளிலும் பொறுப்புகளில் இருக்கின்றார்கள்’.

எஸ்.ஐ.ஓவின் முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஐ. கரீமுல்லாஹ் எழுதுகையில், ‘என்ன செய்ய வேண்டும், எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதில் மர்ஹூம் ஷேக் தாவூத் பாய் மிகத் தெளிவாக இருந்தார். உலகக் கல்வியில் வல்லமையும் மார்க்கப்பற்றும் இஸ்லாமியத் தெளிவும் ஒழுக்கத் தூய்மையும் நிறைந்த இளவல்களைக் கொண்ட டீம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். அதனை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். இதற்காக அவர் தம்முடைய வாழ்வின் வளங்கள் அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்துவிட்டார். திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநாடு நடத்தப்பட்ட போது மாநாட்டின் துணை அமைப்பாளராக இருந்த ஷேக் தாவூத் வெளிப்படுத்திய செயல்திறனும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தியாகமும் ஈடுஇணையற்றதாகும்’ என்று நினைவு கூர்ந்திருக்கின்றார்.

மர்ஹூம் அவர்களின் இறுதித் தொழுகையில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டார்கள். கண்களை கண்ணீர் மறைக்க அவரை நல்லடக்கம் செய்தார்கள். அந்த இரவுப் பொழுதில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட தருணத்தில் குல்லியத்துல் ஸலாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்லரி உருக்கமாக ஆற்றிய உரையில், ‘ஏழாண்டுகளுக்கு முன்பு இதே திருச்சியில் அரபிக் கல்லூரி ஒன்றை நிறுவி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று ஷேக் பாய் கனவு கண்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. அல்லும் பகலும் பாடுபட்டு, கண் துஞ்சாமல் பசி நோக்காமல் உழைத்து அரபிக் கல்லூரியின் வெற்றியைக் கண்ணாரக் கண்டே விடைபெற்றிருக்கின்றார். அல்லாஹ் அவருடைய சேவைகளை ஏற்றுக்கொள்வானாக. இந்தக் கல்லூரியில் எத்தனை எத்தனை ஆயிரம் மாணவர்கள் பயின்று வெளிவந்தாலும் அந்த நன்மைகளில் ஒரு பகுதி ஷேக் பாய்க்கு ஸதகாயே ஜாரியாவாக தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கும்’ என்றார்.

தமிழகத்தின் அனைத்து ஊர்கள்தோறும் இயக்கத்துக்கு ஷேக் தாவூத்கள் போன்ற உளத்தூய்மையும் கடின உழைப்பும் இறைநம்பிக்கை நிறைந்த ஆண்மக்கள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இதே போன்ற மாற்றங்கள் மலர வேண்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

- ஹெச் அப்துர் ரகீப்

முன்னாள் மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகம். 

No comments:

Post a Comment