Tuesday, July 26, 2022

அவர்கள் நிச்சயமாக உங்களைத்தான் வாசிப்பார்கள்..!


இப்போதெல்லாம் நம்முடைய எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக, நாட்டின் பாசிச சக்திகளை எதிர்கொள்ள வேண்டுமானாலும் சரி, கொரோனா பெருந் தொற்று பேரிடர் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கின்ற நெருக்கடி ஆனாலும் சரி, ‘இது அழைப்புப் பணிக்கான சிறப்பான சந்தர்ப்பம்’ என்றே சொல்லப்படுகின்றது. 

நம்முடைய தோழர்கள் மத்தியிலும் அழைப்புப் பணி பற்றி எத்தகைய புரிதலும் சித்திரமும் பதிந்திருக்கின்றது எனில், குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் சுருக்கமான போதனைகளைக் கொண்ட புத்தகங்களின் செட், குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள், ஒரு சில காணொளிகள் போன்றவற்றை சகோதர சமுதாயச் சொந்தங்களுக்குக் கொடுப்பதையும், ஏதேனுமோர் மாநில, தேசிய அளவிலான பரப்புரையின்போதோ சிறப்பு வாரத்தின்போதோ சுறுசுறுப்பாக இயங்கி சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், அறிவுஜீவிகள், அண்டைவீட்டார்கள் போன்றோரைச் சந்திப்பதையும் தான் அழைப்புப் பணி என புரிந்து வைத்திருக்கின்றார்கள். 

அஹ்மத் தீதாத், டாக்டர் ஜாகிர் நாயக் போன்றோரால் கவரப்பட்டு சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர்களோடு விவாதம் புரிவதையும் அவர்களின் மதங்களின் எதிர்மறையான அம்சங்களை எடுப்பாக எடுத்துரைத்து இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை சொல்கின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது. 

இது தொடர்பாக பல்லாண்டுகளுக்கு முன்பு ஜமாஅத்தின் ஒன்றியத் தலைமையகத்தில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 மத்திய தலைமையகம் பழைய தில்லியில் சித்லி கப்ர் பகுதியில் இயங்கி வந்த காலம் அது. அமீரே ஜமாஅத்தாக மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி இருந்தார். உலகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் அலீ அல்ஹர்கான் வந்திருந்தார். இன்னும் சில தலைவர்களும் உடன் இருந்தார்கள். 

ஜமாஅத் செய்து வருகின்ற பணிகள் குறித்து அவருக்கு முன்னால் எடுத்துச் சொல்லப்பட்டது. பல்வேறு மொழிகளில் ஜமாஅத் வெளியிட்ட குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மற்ற அறிமுக இலக்கியங்கள் எல்லாம் அவருக்கு முன்னால் காண்பிக்கப்பட்டது. 

எல்லாவற்றையும் பார்த்த பிறகு அறிஞர் அலீ அல்ஹர்கான் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்து இன்றும் பின்பற்றத்தக்கதாய் மிளிர்கின்றது. அவர் சொன்னார்: 

‘இந்த நாட்டில் நீங்கள் இந்தப் பணிகள் அனைத்தையும் செய்யுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்திருங்கள். மக்கள் நீங்கள் கொடுக்கின்ற குர்ஆன் மொழிபெயர்ப்புகளை, எளிய மொழியில் எழுதப்பட்ட அழகான அறிமுக புத்தகங்களை வாசிக்கின்றார்களோ, இல்லையோ, ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் நிச்சயமாக உங்களை வாசிப்பார்கள். உங்களின் வாழ்க்கைப் புத்தகத்தை அவசியம் வாசிப்பார்கள். எனவே உங்களின் வாழ்வை இஸ்லாத்தின் அச்சில் வார்த்தெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.’ 

நம்முடைய நடத்தையும் பேச்சும் செயலும்தாம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை. விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு உறுதுணையாக மட்டும்தான் நூல்கள் இருக்கும். கேரளத்து கடற்கரையில் இறங்கிய அழைப்பாளர்கள் எந்தவொரு புத்தகத்தையும் தம்முடன் கொண்டு வரவில்லை. மக்கள் அவர்களின் வாழ்க்கை எனும் புத்தகத்தைப் பார்த்துதான் இஸ்லாத்தை அறிந்துகொண்டார்கள். இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள். 

சொல்லாலும் சாத்தியம் இல்லாததை எழுத்தாலும் சாத்தியம் இல்லாததை

மனிதனின் நடத்தையின் வலிமை சாதித்துவிடுகின்றது.

என்றார் ஒரு உர்தூ கவிஞர். 


- ஹெச். அப்துர் ரகீப்