Friday, January 22, 2016

சாதிய அமைப்பு குறித்து மௌலானா மௌதூதி(ரஹ்)



இந்தியாவின் இன்றைய சமூகக் கட்டமைப்பு எண்ணற்ற அடுக்குகளைக் கொண்டதாய்க் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சமூக அடுக்குகளும் எத்தகையதாய் அடுக்கப்பட்டிருக்கின்றனவெனில் இவற்றில் சில சமூகக் குழுக்கள் மேலோங்கி நிற்கின்றனர். வேறு சில சமூகக் குழுக்களோ அவர்களுக்கு அடங்கியவர்களாய் இருக்கின்றனர். இந்த சமூகப் பிரிவுகளுக்கு இடையில் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு நிறுவனமயமாக்கப்பட்டிருக்கின்றது. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தக் கருத்தோட்டம் மிக மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.

அதற்கும் மேலாக ‘மறுபிறப்பு’ பற்றிய தத்துவம் இந்த நம்பிக்கையை இன்னும் அதிகமாக வலுவூட்டியிருக்கின்றது. சமூகக் கட்டமைப்பில் கீழ் அடுக்குகளில் முடக்கப்பட்டவர்களிடம் ‘தாம் அடங்கியிருப்பதற்கே படைக்கப்பட்டவர்கள்; முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது; எனவே இதனை எந்த நிலையிலும் சகித்துக்கொண்டே ஆக வேண்டும்; இந்த நிலையை மாற்றிவிட முயல்வது வீண்’ என்கிற அடிமை சிந்தனை ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது.

ஆதிக்க சமுதாயத்தரிடமோ, ‘தாம் பிறந்ததே இந்த அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தாம். உயர்வும், சிறப்பும் தமக்கு மட்டுமே உரித்தானவை. முந்தைய பிறவியில் தாம் செய்த நற்கருமங்களின் காரணத்தினால்தான் தங்களுக்கு இந்தச் சிறப்பும் உயர்வும் கிடைத்திருக்கின்றன; இவற்றை மாற்றவோ, திருத்தவோ முற்படுவது இறைச்சட்டங்களுக்கு எதிரானது ஆகும்’ என்கிற நம்பிக்கை அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கின்றது.

இவ்வாறாக, இந்த சமூகக் கட்டமைப்பில் உயர் அடுக்கில் இருக்கின்ற ஒவ்வொரு சமூகத்தாரும் கீழ் அடுக்கில் இருக்கின்ற சமூகத்தாரின் தலைமீது கால் வைத்தவாறு நின்றுக்கொண்டும் அதனைத் தேய்த்து நசுக்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தச் சிந்தனையும் பாகுபாடுகளும் சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. கால் வைக்கின்ற இடங்களில் எல்லாம் அநீதியும் அக்கிரமும் கணக்குவழக்கின்றிக் காணப்படுகின்றன. நாகரிகத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளிலும்கூட ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உணவு உண்ணும் போதும் சரி, நீர் அருந்தும்போதும் சரி, நடையுடை பாவனைகளிலும் சரி, திருமணம், மரணம் போன்ற சுகதுக்கத்துக்கான சந்தர்ப்பங்களிலும் சரி அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் இந்தப் பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அதற்கும் மேலாக இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் பிறரை இழிவுபடுத்துகின்ற, கேவலமாகக் கருதுகின்ற போக்கும் நிலை பெற்று விட்டுள்ளது.

இந்த இழிவான போக்கு எந்த அளவுக்கு முற்றிப் போய் விட்டிருக்கின்றது எனில் தாம் உடுத்துவதைப் போன்ற ஆடைகளையும், தாம் அணிவதைப் போன்ற அணிகலன்களையும் தாழ்ந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உடுத்துவதையோ, அணிவதையோ உயர் அடுக்கில் இருக்கின்ற சமுதாயத்தாரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. சில நாள்களுக்கு முன்பு இராஜஸ்தானில் இதனைக் கண்கூடாகப் பார்த்தோம்.

அங்கு சம்மார் என்கிற கீழ்சாதியைச் சேர்ந்த மக்கள் போர் காரணமாக பணம் படைத்தவர்களாய் ஆகிவிட்டனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வந்துவிட்டிருந்தனர். இந்தச் செழிப்பான மக்கள் தங்களின் பெண்களுக்கு ஆடைகளையும் அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்த்தனர்.

இது ஜாட்களையும்(Jats) குஜ்ஜார்களையும்(Gujjars) உசுப்பிவிட்டது.

எங்களுடைய பெண்கள் அணிவதைப் போன்ற ஆடைகளையும் அணிகலன்களையும் இந்த சம்மார்கள் எப்படி தங்களின் பெண்களுக்கு அணிவிக்கலாம் என்று கொதித்தெழுந்து பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் இந்தக் குஜ்ஜார்களையும் ஜாட்களையும் இராஜ்புத்கள் என்கிற உயர் சாதியினர் இந்தக் காரணத்தைச் சொல்லியே கேவலப்படுத்தி வந்தார்கள் என்பது தனிக் கதை.

இராஜ்புத்களின் நடத்தை தருகின்ற கசப்பை அனுபவித்து வந்த நிலையிலும் இந்தக் குஜ்ஜார்களும் ஜாட்களும் சம்மார்களுடன் அதே போன்று நடந்துக்கொண்டார்கள். சமூகப் படிநிலைகளில் எங்களுக்கு இணையாக இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வந்து அமர்ந்து விடலாம் என இவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.

இவ்வாறாக, எந்த இழிநிலையிலிருந்து மேலே எழுந்துவிட அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பினார்களோ அதே இழிநிலையில் மீண்டும் அவர்களைத் தள்ளிவிடவே இவர்கள் ஒன்றுசேர்ந்து ஓங்கிக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பொருளாதாரக் கட்டமைப்பும் பெரும் அளவில் மேற்படி சமூகக் கட்டமைப்பின் வரிசைமுறையில்தான் நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சமூகக் கட்டமைப்பின் கொடூரமான அம்சங்களைக் கூர்மைப்படுத்துவதும் விதத்தில்தாம் நவீன முதலாளித்துவத்தின் தனித்தன்மைகள் கூட்டுச் சேர்ந்துவிட்டுள்ளன.

தொன்மையான சித்தாந்தங்கள், மெய்யியல் பேசும் தத்துவங்கள் ஆகியவற்றின் துணையுடன் எந்தச் சமூகக் குழுக்கள் சமூகப் படிநிலைகளின் மேல் அடுக்குகளில் நிலையாகக் குடியமர்ந்து விட்டிருந்தனவோ அவர்கள் நாட்டின் நாகரிக வாழ்வில் உயர்ந்த சிறப்பிடங்களையும் மேன்மையையும் தமதாக்கியவாறு தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேலாக, அதனுடன் நாட்டின் செல்வ வளங்கள், வசதி வாய்ப்புகள் ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றைத் தமதாக்கிக் கொண்டார்கள்; சமூகப் படிநிலைகளின் கீழ் அடுக்குகளில் இருப்பவர்களையோ மேல் அடுக்குகளில் இருக்கின்ற மக்களுக்குத் தொண்டூழியம் செய்தும் கூலி வேலை செய்தும் பிழைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற கேவலமான நிலைமையில் தள்ளிவிட்டார்கள்.

இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏதிலிகள், பாட்டாளிகள் போன்றோர் மீது இழைக்கப்படுகின்ற அநியாயங்கள், அக்கிரமங்கள், உரிமைப் பறிப்புகள் போன்றவற்றைக் கணக்கிடுவதும் சிரமமானதே. அது மட்டுமல்ல மேல் அடுக்குகளில் வாழ்கின்ற மக்கள் தம்முடைய வட்டத்திற்குள்ளும் பல்வேறு விதமான அக்கிரங்களிலும் உரிமைப்பறிப்புகளிலும் கொடுமைகளிலும் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக செல்வச்செழிப்புமிக்கவர்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே போக, செல்வவளம் இல்லாமல் மோசமான நிலையில் வாழ்வை ஓட்டுகின்ற எளியவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போயிற்று.

இன்னும் சொல்லப்போனால் இவர்களிடம் நடைமுறையில் இருந்த வட்டிப் பணத்தை உண்ணுகின்ற பழக்கமும், குடும்பச் சொத்துகளைக் கூட்டாக நிர்வகிக்கின்ற கூட்டுக் குடும்ப வழிமுறையும் (Joint Family System) மூத்த மகனயே ஒட்டுமொத்த சொத்துக்கும் ஒரே வாரிசாக அறிவிக்கின்ற தலைப்பிள்ளைக்கான வாரிசு சட்டமும் (Law of Primogeniture) இன்னும் இவை போன்ற எண்ணற்ற பழக்கவழக்கங்களும் செல்வத்தையும் செல்வத்தை உண்டுபண்ணுகின்ற வழிவகைகளையும் ஒரு சிலரிடம் குவித்துவிடுபவையாயும், பெரும்பாலான மக்களுக்கு எத்தகைய வழிவகையையும் அளிக்காமல் தடுத்து மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமைக்கு அவர்களைத் தள்ளிவிடுபவையாயும் இருக்கின்றன. இந்த நடைமுறைகளின் பயனாக எந்த மக்களிடம் செல்வவளம் குவிந்திருந்ததோ அவர்கள் இப்போது நவீன முதலாளித்துவ வழிமுறைகளை மேற்கொண்டு நாட்டின் தொழில், வணிகம், பொருளாதாரம் ஆகிய அனைத்தின் மீதும் தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டார்கள்; அந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.

இப்போது கட்டமைக்கப்படுகின்ற அரசியல் அமைப்பின் அடிப்படையான ஆவணத்தில் மக்களாட்சி, சமூக நீதி(Social Justice), சமத்துவம், எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகள் (Equal Opportunities) போன்ற வானளாவியக் கருத்தோட்டங்கள் இம்மியளவுகூட அழுக்கு படியாத, மாசற்ற, மனத்தை மயக்குகின்ற சொற்களில் ஏட்டளவில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

ஆனால் இந்தக் கருத்தோட்டங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் இவற்றுக்கு மதிப்பே தவிர, இந்த வெற்று வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது வெளிப்படை.

நடைமுறை வாழ்வில் நாம் அன்றாடம் பார்ப்பது என்ன?

இந்த அரசியல் அமைப்பை உருவாக்குதல், வடிவமைத்தல், கட்டமைத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய அனைத்துப் பணிகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது யார்?

இன்றைய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் உயர்வான படிக்கட்டுகளில் வீற்றிருக்கின்ற - இல்லை பிறந்திருக்கின்ற சமூகக் குழுவினர்தாம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த சமூகக் குழுவினருக்கு அனைத்தையும் கொடுத்திருக்கின்றான். ஆனால் பெரிய மனத்தையும், விரிந்த பார்வையையும், அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற தீரத்தையும் ஏனோ இவர்களுக்குத் தரவே இல்லை. இவர்களின் குறுகிய மனப்பான்மை இன்று வரையிலும் இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்புகளையே தந்து வந்துள்ளது. இவர்களின் இந்த வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கின்ற போது இவர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்காகப் பயன்படுத்துவார்கள் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது.

ஆக, கசப்பு உணர்வும் கொடுமைக்காளான வலிகளும் நிறைந்ததாய்த்தான் இன்றைய இந்த நிலைமைகள் இருக்கின்றன. இந்த வலியையும் துன்பத்தையும் நாட்டின் சாமான்ய மனிதர்கள் மிகக் கடுமையாக உணர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது வரை இனவாத போதை இந்தக் கசப்புணர்வை பெரும் அளவில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. நாட்டின் நிர்வாகம் நம்முடைய கைகளில் வந்துவிடுமேயானால் இந்த அநீதிகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நாட்டின் ஆட்சியதிகாரம் உண்மையிலேயே நாட்டு மக்கள் வசம் மாற்றப்படுகின்ற போது அந்த அதிகாரங்களைக் கொண்டு நாட்டில் சமூக நீதி உண்மையிலேயே நிலைநிறுத்துகின்ற பணியை மேற்கொள்வது எப்படி என்கிற அடிப்படைக் கேள்வி பேருருவம் எடுப்பதை நீண்டக்காலத்திற்குத் தள்ளிப் போட முடியாது.

இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கடிவாளங்கள் இன்று எந்த மக்களிடம் கைமாறிக்கொண்டிருக்கின்றனவோ அவர்கள் இந்துக் கலாச்சாரத்தின் முந்தையப் பாரம்பர்யங்களை மேற்கத்திய, அய்ரோப்பிய, அமெரிக்க வாழ்க்கை முறையுடன் கோத்துவிடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமேயானால் இவர்கள் ஒரு வகையான போலி மக்களாட்சியையும், ஒரு மேம்போக்கான சமத்துவத்தையும், நீதியை நிலைநாட்டுவது போன்ற மாயத் தோற்றத்தையும் நிலைநிறுத்துவதில் திண்ணமாக வெற்றி பெற்றுவிடுவார்கள்.

ஆனால் அந்தப் போலியான தோற்றங்களுக்குப் பின்னால் வழக்கம்போல அதே அநீதிகளும், அதே வஞ்சகங்களும், அதே பாகுபாடுகளும், அதே பிரிவுகளும் இன்று இருக்கின்ற அதே சூட்டுடனும் தகிப்புடனும் நிலைத்து நிற்கும்.

ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கின்ற போக்கும், சமூகப் பாகுபாடுகளும் இந்துக் கலாச்சாரத்தின் இரத்த நாளங்களில் ஊறிப் போய்க் கிடக்கின்றவை ஆகும். அவை இரத்தத்தில் கலந்திருக்கின்ற நிலையில் உண்மையான மக்களாட்சியை நிலைநிறுத்துவது இயலாத காரியம் ஆகும். அதனுடன் மேற்கத்திய சித்தாந்தங்களைக் கோத்துவிடுவதால் மிதமிஞ்சி என்ன கிடைத்துவிடப் போகின்றது? மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்துக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் தேர்தல்கள் மூலமாகவும் அவற்றில் பெறப்படுகின்ற வாக்குகள் மூலமாகவும் சட்டரீதியான அங்கீகாரமும் அதிகாரப்பூர்வமான அனுமதியும்தாம் கிடைத்துவிடும் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.

இதனால்தான் இவர்களின் இந்தச் செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் சாமான்ய மக்கள் சொற்பக் காலத்திலேயே நிராசைக்கும் விரக்திக்கும் ஆளாகிவிடுவார்கள் என்பது உறுதி. இந்த ஆளும் வர்க்கத்தினரால் நீதியை நிலைநாட்ட முடியாமல் போகும்போது விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், மேல்தட்டு மக்களிலேயே வறிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என ஒட்டுமொத்த இந்திய சாமான்ய மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் நீதமிக்க மாற்று அமைப்புக்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள்; அதற்கான தேடலில் இறங்கிவிடுவார்கள். அந்த நிலை வருவதற்கு நீண்ட நேரமும் பிடிக்காது.

- 26, ஏப்ரல், 1947 சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் தென்னிந்திய மாநாட்டில் அமீரே ஜமாஅத் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையிலிருந்து...

Thursday, January 14, 2016

மாறி வரும் உலக நிலைமைகளும் இஸ்லாமிய இயக்கமும்



உலகெங்கும் முஸ்லிம்கள் அனைவரும் இப்போது தங்களுடைய வரலாற்றின் மிக மிகக் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஒரு சில நாடுகளைத் தவிர ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் அடிமைப்பட்டிருந்த அவலத்தையும் இந்த முஸ்லிம் உம்மத் இதற்கு முன்பு சந்தித்திருக்கின்றது. அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.


என்றாலும் இன்று விடுதலை பெற்ற நாடுகளாகச் சொல்லிக் கொள்கின்ற நாடுகளில் வாழ்கின்றவர்களும் சரி, மற்ற நாடுகளில் வாழ்பவர்களானாலும் சரி, உலக முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அவமானத்துக்கும் கேவலத்துக்கும் ஆளாகி இருக்கின்றார்கள் எனில், உலகெங்கும் வாழ்கின்ற 150 கோடி முஸ்லிம்கள் தினம் தினம்  எந்த அளவுக்கு அவமானகரமான, கேவலமான, மனத்தை முள்ளாகத் தைக்கின்ற, கையாலாகாத தனத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்துகின்ற, நெஞ்சத்தை சுக்குநூறாக வெடிக்கச் செய்கின்ற செய்திகளுடன் கண் விழிக்கின்றார்கள் எனில் அதற்கு இணையான அவலத்துக்கும் கையறு நிலைக்கும் வரலாற்றில் இதற்கு முன்பு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் சந்தித்தது கிடையாது.

ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் வல்லரசு நாடுகளின் சூழ்ச்சிகளுக்கும் சதிகளுக்கும் இரையாகி அவற்றின் விளையாட்டுக்களமாய் மாறி நிற்கின்றது. இஸ்லாமிய நாடுகளில் மனித இரத்தம் தண்ணீராய்ப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய இயக்கங்களைப் பொருத்த வரை அவை தம்முடைய வரலாற்றில் மிக மிகக் கடுமையான எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் சந்தித்து நிற்கின்றன. 
ஒரு பக்கம் அவர்களுக்கு எதிராக வல்லரசு நாடுகள் அனைத்தும் அணி திரண்டிருக்கின்றன.  மறுபக்கம் பெயர்தாங்கி முஸ்லிம் நாடுகளும் அவர்களை நசுக்கி அழித்து விடுவதற்கு தம்முடைய முழு வலிமையையும் பிரயோகித்து வருகின்றன. அதற்கும் மேலாக, ஊடகம், இணையதளம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எண்ணற்ற அமைப்புகள் ஏராளமான வடிவங்களில் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதிலும், பொதுமக்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகின்ற முயற்சியிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. இஸ்லாமிய சிஸ்டத்தை மட்டுமா இவர்கள் குறி வைத்திருக்கின்றார்கள்? அதற்கும் மேலாக இஸ்லாத்தின் அடிப்படை மாண்புகள், கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமைகள் குறித்து இன்று இரண்டு கோணங்களில் ஆய்வு செய்யப் போகின்றோம். ஒன்று, இது போன்ற நிலைமைகள் உருவானதற்கான காரணங்கள் என்ன? இரண்டு, இவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கான, இவற்றை வெற்றிகொள்வதற்கான பாதை எது?

நண்பர்களே!
இன்றைய வல்லரசுகளின் பார்வையில் இஸ்லாமிய நாடுகள் அசாதாரணமான முக்கியத்துவத்தைப் பெற்று இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு நான்கு பெரும் காரணங்களைச் சொல்லலாம். 1. மத்திய கிழக்கின் எண்ணெய் வளம். 2. இஸ்ரேலின் இருப்பும், அதன் பாதுகாப்பும். 3. புவியியல் ரீதியாக மையத்தில் இருப்பதால் இந்தப் பகுதிகளுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் 4. உலக முஸ்லிம்களின் மையமாக இந்தப் பிரதேசம் இருப்பது.
இந்த நான்குமே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நலன்கள் ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன.

அய்ரோப்பா மிக வேகமாக முதுமை அடைந்து வருகின்றது. இன்று அய்ரோப்பிய நாடுகளில் ஐவரில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருக்கின்றார். அய்ரோப்பாவின் பொருளாதாரத்துக்கோ இளஇரத்தம் தேவைப்படுகிறது. இந்த இளைய சக்தி அதற்கு இஸ்லாமிய நாடுகளிடமிருந்துதான் கிடைக்கும்.
ஆனால், இந்த இஸ்லாமிய இளைய தலைமுறையினருடன் இஸ்லாமும் வந்து விடுமே என்கிற அச்சுறுத்தல் வேறு. இதனால் அய்ரோப்பா பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. பொருõளாதாரச் செயல்பாடுகளைத் தக்க வைப்பதற்காக அவர்களுக்கு உழைக்கும் கரங்கள் தேவை. இதனால் அவர்களால் குடியேற்றத்தைத் தடுக்க முடியாது. ஆனால் இஸ்லாம் வந்து விடுமே என்கிற அச்சமோ அந்தக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதை விட்டு அவர்களைத் தடுக்கின்றது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக ஒரு பக்கம் இளைஞர்களின் வருகையையும் குடியேற்றத்தையும் தொடர அனுமதித்தாலும் அந்த இளைஞர்களால் அய்ரோப்பிய மண்ணில் இஸ்லாமிய வாசம் வீசுவதைத் தடுத்துவிடுகின்ற வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் வகுக்கின்ற குறுக்கு வழியை அய்ரோப்பியர்கள் கண்டுபிடித்தனர்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பொருõளாதாரம் மிக வேகமாக முழுக்க முழுக்க சீனாவின் கடன்களைச் சார்ந்ததாய் ஆகிவருகின்றது. இந்தப் பொருளாதார அடிமைநிலையை முறிக்கின்ற ஒரே வழி சீனாவின் பொருளாதாரத்தையும் அமெரிக்காவைச் சார்ந்ததாய் ஆக்குவதுதான். இந்த நோக்கத்தை அடைய வேண்டுமெனில் ஒரு பக்கம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய்ப் பொருள்கள் செல்கின்ற பாதைகள் அனைத்தும் முழுக்க முழுக்க அமெரிக்கக் கட்டுப்பாட்டில் வந்து விட வேண்டும். மறுபக்கம் சீனப் பண்டங்கள், தயாரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற நெடுஞ்சாலைகள், நீர்ப் பாதைகள் - இவற்றில் பெரும்பாலானவை மத்தியக் கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில்தாம் இருக்கின்றன - அனைத்தும்கூட அமெரிக்காவின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட வேண்டும். போதாக் குறைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் மத்திய கிழக்கின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் நிலைபெறுவது அவசியம் ஆகும்.

இவை போன்ற ஏராளமான காரணங்களைக் கருத்தில் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் டாலரைக் கொண்டு விலைக்கு வாங்க முடியாத மனிதர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்றும் அதிகாரக் கேந்திரங்களைக் கைப்பற்றிவிடக் கூடாது என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.  அதே சமயம் மாறி வரும் உலகச் சூழல்களால் இந்த வட்டாரத்தைத் தம்முடையக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் குறிப்பாக மத்தியக் கிழக்கின் பெரும் பெரும் நாடுகளைத் தம்முடைய ஆளுகைக்குள் வைத்திருப்பதும் அவர்களுக்குப் பெரும் பாடாகி வருகின்றது. இந்த நிலையில் இதற்கு முன், முதல் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்திய சக்திகள் தமது நலன்களைத் தக்க வைத்துக்கொள்கின்ற நோக்கத்துடன் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு வட்டாரத்திற்குள்ளும் குறுக்கும் öடுக்குமாகக் கோடுகள் கிழித்து வரைபடத்தையே மாற்றி அமைத்ததைப் போன்று இப்போது மீண்டும் நாடுகளையும் நாடுகளின் வரைபடங்களையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை வந்துவிட்டதாக அவர்கள் கணக்குப் போடுகின்றார்கள். அவர்களின் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் இந்த வட்டாரம் முழுவதிலும் மிகப் பெரும் அளவில் இரத்தக் களரியும் சமூகக் கொந்தளிப்பும் உள்நாட்டுப் போரும் வெடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள். இது போன்ற மனித அவலம் அரங்கேறுவதை அவர்கள் constructive chaos ஆக்கப்பூர்வமான குழப்பம் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இவ்வாறாக constructive chaos  என்கிற இந்தக் கொள்கையின் அடிப்படையில் மத்தியக் கிழக்கு நாடுகளில் மிக மிகக் கடுமையான அளவில் இரத்தக்களரியும் குழப்பமும் கலவரமும் வெடிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள்.

இந்த அரசியல், பொருளாதாரக் கணக்குகள், காரணங்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் ஒரு பக்கம் இருந்தாலும், மத்தியக் கிழக்கில் இந்த ஏகாதிபத்தியச் சக்திகளின் தலையீட்டுக்கான உண்மையான காரணம் இஸ்லாம்தான். இந்த இப்லீசிய - ஷைத்தானிய சக்திகள் அனைத்தும் தமக்கு எதிரான மிகப் பெரும் சக்தியாக இஸ்லாத்தைக் கண்டுதான் வெலவெலத்துப் போய் இருக்கின்றார்கள்.‘

அவர்கள் இஸ்லாத்தை மிகப் பெரும் ஆபத்தாக நினைத்து நடுங்குவதற்கான காரணம், இன்றையக் கொந்தளிப்பான நிலைமைகளிலும்கூட உலகம் முழுவதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலும் மிக வேகமாக, அழுத்தமாக மக்களை ஈர்த்து வருகின்ற இஸ்லாத்தின் ஈர்ப்பாற்றல்தான். நவீன மேற்கத்திய உலகம் தூக்கிவைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் நெறிக்கு மாற்றாக ஓங்கி நிற்கின்ற திறனும் வல்லமையும் இஸ்லாத்திற்கு மட்டுமே இருப்பதாலும் அவர்கள் அதனை ஒரு ஆபத்தாகப் பார்க்கின்றார்கள்.

இன்றையக் காலத்தில் மேற்கத்திய முதலாளித்துவப் பண்பாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்பது சற்றொப்ப நிர்ணயமாகிவிட்டது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட இந்த சாம்ராஜ்யம் தன்னுடைய அடிப்படையான தத்துவங்களுடனும், தன்னுடைய அமைப்பின் நிறுவனக்கூறுகளுடனும் இப்போது தனது வீழ்ச்சியின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்து விட்டது. நவீன மேற்கத்திய உலகிலோ இன்று உலகாயதக் கொள்கைகள் மீதான வெறுப்பும் சலிப்பும் உச்சத்தை எட்டிவிட்டுள்ளன. மதம், ஆன்மிகம், ஆன்மிக மாண்புகள் ஆகியவற்றின் பக்கம் மக்கள் மீண்டுக்கொண்டிருக்கின்றார்கள். அய்ரோப்பிய நாடுகள் எங்கும் அலையாக வீசிக்கொண்டிருக்கின்ற இந்த மீளலை மேற்கத்திய எழுத்தாளர்கள் Desecularisation என்றே அழைக்கின்றார்கள். கடிவாளம் இல்லாத உலக மோகமும், வரம்புகளையும் எல்லைகளையும் தாண்டி சக்திக்கும் மேலாகச் செலவிடுகின்ற இயல்பும், வட்டியும், வட்டியின் மீது வாங்கப்பட்ட கடன்களும் ஏற்படுத்தியிருக்கின்ற பேரழிவுகளால் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்ற ஒவ்வொரு சாமானியனும் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாய் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கைகளைப் பிசைந்துக்கொண்டு நிற்கின்றான். இப்போது அவன் பொருளாதாரத்திற்கான மாற்று வழிமுறைகளைத் தேடத் தொடங்கியிருக்கின்றான். நவீன முதலாளித்துவ சிஸ்டத்தின் அநேகக் கூறுகளை மிகப் பெரும் ஊறு விளைவிப்பவையாயும் கேடு விளைவிப்பவையாயும் மேற்கத்திய உலகின் பெரும் பெரும் பொருõளாதார வல்லுநர்களே நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு புதிய உலகளாவிய பொருõளாதார சிஸ்டத்தின் தேவையை - பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் A New Bretton woods -இன் அவசியத்தை அவர்கள் உணரத் தொடங்கி இருக்கின்றார்கள்.

குடும்ப மாண்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்ற, குடும்பங்கள் சிதறிப் போகின்ற நோய் இன்று மேற்கத்திய உலகிலிருந்து கிளம்பி கிழக்கத்திய சமூகங்களிலும்கூட வேகமாகத் தொற்றிவிட்டுள்ளது. இப்போது குடும்ப மாண்புகளைக் கட்டிக் காக்கின்ற கடைசி கோட்டையாக இஸ்லாம் நிற்கின்றது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் குடும்ப அமைப்பு வலுப்பெறாத வரையில் நிலையான சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்கான சாத்தியமே இல்லை; நிம்மதி நிறைந்த தனிப்பட்ட வாழ்வுக்கும் வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் குடும்ப மாண்புகளைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கத்திய உலகம் உணரத் தொடங்கியிருக்கின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொதுத் தேர்தல்களின் முக்கியமான விவாதப்பொருளாக குடும்ப மாண்புகளும் குடும்ப அமைப்பின் வலுவாக்கமும் ஆகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால்க ஆஸ்திரேலியாவில் முதல் முன்னுரிமை குடும்பத்துக்கே என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட அரசியல்கட்சி (Family first Party) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்மிக சுகத்தைத் தேடியடைகின்ற வேட்கையினாலும், சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டிய கட்டாயத்தினால் உந்தப்பட்டு அவற்றைத் தேடியடைகின்ற தவிப்பினாலும், வலுவான குடும்பக் கட்டமைப்பு, மிக உயர்வான குடும்ப மாண்புகள் ஆகியவற்றைத் தேடியும் மக்கள் மிகப் பெரும் அளவில் மன எழுச்சியுடன் பொதுவாக கிழக்கத்திய மதங்களின் பக்கமும் குறிப்பாக இஸ்லாத்தின் பக்கமும் பாய்ந்தோடி வந்துக்கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற நிலைமைகளில் மற்றெல்லா கிழக்கத்திய மதங்களைக் காட்டிலும், தத்துவ நெறிகளை விடவும் கோட்பாட்டிலும் சரி, ஒழுக்க போதனைளிலும் சரி, ஆன்மிகக் கட்டமைப்பிலும்சரி உறுதியானதாகவும் வலுவானதாகவும் இருப்பதாலும், நிலையான, மாறாத அடிப்படைகளைக் கொண்டதாகவும் இருப்பதால் இஸ்லாம் மிக எளிதாகவும் அதிகமாகவும் மக்களைக் கவர்ந்துக்கொள்ளும் என்றே மேற்கத்திய கொள்கை விற்பன்னர்கள் கருதுகின்றார்கள். 

இந்த நிலைமை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்த அடிப்படைகள் குறித்து மிக மிகக் கடுமையான அதிருப்திக்கு ஆளாகி நிற்கின்றது. இந்த அதிருப்தியும் மனக்குறைகளும் அவர்களை எந்த அளவுக்கு ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றனவெனில் அமெரிக்காவையும் அமெரிக்க வாழ்க்கை நெறியையும் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த தாமஸ் ஃபிரைட்மான் போன்ற பன்னூல் ஆசிரியரே மனம் நொந்து விரக்தி கீதம் பாடத் தொடங்கியிருக்கின்றார். நிராசை நிறைந்த இந்தப் பாடல் வரிகள் இன்று அமெரிக்காவின் தேசிய கீதமாய் ஆகிவிட்டிருக்கின்றது.
அந்தப் பாடலின் வரிகளைக் கேளுங்கள்:

I was going where I shouldn't go...... Seeing who I shouldn't see
எந்த இடத்திற்கு நான் போயிருக்கக் கூடாதோ அந்த இடத்துக்கே நான் போய்க் கொண்டிருந்தேனே...
எதனையெல்லாம் நான் பார்க்கவே கூடாதோ அவற்றையே நான் பார்த்துக்கொண்டிருந்தேனே...

Doing what I shouldn't do...... And being who I shouldn't be
எவற்றையெல்லாம் நான் செய்திருக்கவே கூடாதோ அவற்றையே நான் செய்துக்கொண்டிருந்தேனே...
எப்படியெல்லாம் நான் ஆகியே இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் நான் ஆகிவிட்டிருந்தேனே....

I used to think that I was strong..... But lately I just lost the fight.
நான்தான் பலசாலி என்றே நான் என்னை நானே நினைத்து வந்தேனே.....
ஆனால் இப்போது நடந்த சண்டையில் தோற்றுப்போய் நிற்கின்றேனே.....

மறுபக்கம் இஸ்லாமிய உலகம் எந்தக் கீதத்தை பாடிக் கொண்டிருக்கின்றது, கவனித்தீர்களா?

லா அஸ்கரிய்யா  வலா தெக்தாதோரியா.....
இராணுவ ஆட்சியும் வேண்டாம்.... சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம்....

வலா இல்மானிய்யா.... வலா ஸயூக்ராதிய்யா....
செக்குலரிசமும் வேண்டாம்... தியாக்ரஸியும் வேண்டாம்...

கராமத்து வஇஸ்ஸது வஇன்சானிய்யா...
ஹிஸாரத்து மிஸ்ருல் இஸ்லாமிய்யா...
கண்ணியமும் மதிப்பும் மனித மாண்பும் வேண்டும்...
எகிப்து மண்ணில் இஸ்லாமே வேண்டும்....

எகிப்து மண்ணில் மட்டுமா இந்த முழக்கங்கள் எதிரொலிக்கின்றன? மொராக்கோவின் சந்தைகளிலும் துனிஸீயாவின் காஃபிக் கடைகளிலும் அல்லவா இவை தொடர்ந்து எதிரொலிக்கின்றன? இன்னும் சொல்லப்போனால் எகிப்தின் இருள் சூழ்ந்த சிறைக்கொட்டடிகளிலும் சிரியாவின் சித்திரவதைக் கூடங்களிலும் அல்லவா இந்த புரட்சி கீதம் புதுத் தெம்பையும் புதிய எழுச்சியையும் ஊட்டி வருகின்றது..!

இவையிரண்டுக்கும் இடையிலான வேறுபாடு மிக மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு பக்கம் தாமஸ் ஃபிராட்மேனின் பாடல் இலையுதிர் காலத்திய சோகக் கீதமாக இருக்கின்றது எனில் மறு பக்கம் இஸ்லாமிய உலகத்தில் எதிரொலிக்கின்ற முழக்கங்களோ இஸ்லாமிய வசந்தத்தின் வருகையைக் கொண்டாடுகின்ற எழுச்சி கீதங்களாய் அதிர்கின்றன. ஒரு பக்கம் மூப்பும் பிணியும் தொற்றிக் கொண்டதால் நிராசையிலும் வருத்தத்திலும் உழல்கின்ற முதியவனின் ஒப்பாரி கேட்கின்றது எனில், மறு பக்கம் நெட்டி முறித்தவாறு தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்து நிற்கின்ற இளைஞனின் ஆர்ப்பரிப்பும், எழுச்சியும் நிறைந்த உரிமை கீதங்கள் விண்ணை முட்டுகின்றன. இதுதான் மேற்கத்திய பண்பாட்டுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் இன்று காணப்படுகின்ற வித்தியாசம் ஆகும்.

ஒருபக்கம் மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்தங்கள் மீதும், தன்னுடைய பாரம்பர்யத்தின் மீதும், தன்மீதும், தன்னுடைய சிஸ்டத்தின் மீதும் தான் இது வரை தூக்கிக்கொண்டாடி வந்த மாண்புகள் மீதும் நிராசையடைந்து சலிப்புற்று நிற்கின்றது எனில், மறுபக்கமோ இஸ்லாமிய உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதரும் இஸ்லாத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டவராய் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கின்றார். இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய சிஸ்டத்தின் மீதும் இஸ்லாமிய மாண்புகளின் மீதும் முஸ்லிம்களின் நம்பிக்கையும் பற்றும் பன்மடங்கு அதிகரித்துவிட்டுள்ளன. உலகெங்கும் இதே நிலைமைதான். இதற்குச் சான்றாக ஏராளமான சர்வே முடிவுகளையும் புள்ளிவிவரங்களையும் சொல்ல முடியும். அதற்கான நேரம் இங்கு இல்லை.

இஸ்லாத்துடனான நெருக்கமான பற்றின் விளைவாக முஸ்லிம்கள் மிகப் பெரும் அளவில் முன்னேற்றத்தையும் கண்டு வருகின்றார்கள். இன்றைய நாளில் அறிவியல் ஆய்வுகளின் செயல்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமேயானால் உலகம் முழுவதிலும் ஈரான் தான் முதலிடத்தில் நிற்கின்றது. துருக்கியிலோ ஏகேபியின் ஆட்சியின் கீழ் மிக உயர்ந்த படித்தரங்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிக்கப்படுவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆய்விலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கையைப் பொருத்த வரை இன்று ஒட்டுமொத்த அய்ரோப்பாவில் துருக்கிதான் முதல் இடத்தை வகிக்கின்றது. இனி வருங்காலங்களில் சர்வதேசப் பொருளாதாரத்தை வரையறுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய நாடுகளாய் அடையாளம் காணப்பட்டுள்ள பதினோரு நாடுகளில் ஏழு முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன.

நண்பர்களே!  
இந்த மாதிரியான நிலைமைகள்தாம் இஸ்லாமோ ஃபோபியா என்கிற கருத்தாக்கத்துக்கு வழி அமைத்திருக்கின்றன. இத்தகைய நிலைமைகள்தாம் மத்தியக் கிழக்கில் இரத்தக் களரிக்கான உண்மையான காரணங்கள் ஆகும். இஸ்லாமிய இயக்கங்களுடனான பகைமை உணர்வுகள் மூட்டிவிடப்படுவதற்கும் இவைதாம் காரணம் ஆகும்.